கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியானது நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் 5வது வரிசையிலுள்ள ஆன்ஸ் ஜபேர்(28) (துனிசியா) -கரோலின் கார்சியா (பிரான்ஸ்) மோதினர். இவற்றில் ஜபேர் 6-1 , 6-3 என்ற நேர் செட் கணக்கில் 17ம் நிலை வீராங்கனையான கார்சியாவை எளிதில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார். இந்த வெற்றியை பெறுவதற்கு அவருக்கு 1 மணி 6 நிமிட நேரம் தேவைப்பட்டது. இதில் ஜபேர் முதன் முறையாக அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
ஜூலை மாதம் நடைபெற்ற விம்பிள்டனில் அவர் இறுதிப்ஆட்டத்துக்கு தகுதிபெற்ற முதல் ஆப்பிரிக்க வீராங்கனை என்ற சாதனையை படைத்து இருந்தார். இப்போது 2-வது முறையாக கிராண்ட்சிலாம் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இத்தோல்வியால் கார்சியாவின் முதல் இறுதிப் போட்டி கனவு கலைந்துவிட்டது. மற்றொரு அரையிறுதியில் நம்பர்ஒன் வீராங்கனையான இகாஸ்வியாடெக் (போலந்து),-ஷபலென்கா (பெலாரஸ்) மோதினர். 6வது வரிசையிலுள்ள ஷபலென்கா முதல்செட்டை 6-3 எனும் கணக்கில் வென்று அதிர்ச்சி கொடுத்தார்.
எனினும் ஸ்வியாடெக் சுதாரித்து ஆடி தொடர்ச்சியாக 2 செட்டையும் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார். ஸ்கோர் 3-6, 6-1, 6-4 ஆகும். 21 வயதான அவர் அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முதல் தடவையாக முன்னேறி இருக்கிறார். 2 முறை பிரெஞ்சு ஓபன் பட்டத்தை கைப்பற்றிய ஸ்வியாக்டெக் ஒட்டுமொத்தத்தில் 3வது முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளார். ஷபலென்காவின் இறுதிப் பேரட்டி கனவு 3வது முறையாக தகர்ந்து இருக்கிறது. இறுதிபோட்டியில் ஸ்வியாடெக்-ஆன்ஸ் ஜபேர் மோதுகின்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் கேஸ்பர் ரூட் (நார்வே)-கரென் கச்சனோவ் (ரஷியா), கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்)-பிரான் செஸ்டியாபோ (அெமரிக்கா) மோதுகின்றனர்.