இந்திய வரலாற்றில் இதுவரையிலும் காணாத அடிப்படையில் அமெரிக்கடாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் 80 என்ற அளவில் சரிந்து இன்றைய வர்த்தகம் நடந்து வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. தொடர்ந்து 2 நாட்கள் ஏற்றத்திற்குப் பின் இன்று வர்த்தகத்தின் தொடக்கத்தில் சரிவைச் சந்தித்தது. இன்று காலை அந்நியச் செலாவணிச் சந்தையில் வர்த்தகம் துவங்கியவுடன், டாலருக்கு எதிராக ரூபாய் 79.99 என தொடங்கிய நிலையில் அடுத்த சில நிமிடங்களில் ரூபாய் 80.02 ஆக சரிந்தது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை அதிகரிக்கப்போகிறது என்ற தகவலும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதும் ரூபாய் மதிப்பு சரிவதற்கு முக்கியமான காரணம் என கூறப்படுகிறது.
முன்பாக சவுதிஅரேபியா கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த முடியாது என்று கூறியதால், நேற்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது 5 % உயர்ந்தது. வருகிற 26 மற்றும் 27ஆம் தேதி பெடரல் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டம் நடைபெற உள்ளது. இவற்றில் அமெரிக்காவின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல்வங்கி 100 புள்ளிகள் வரை அதிகரிக்கும் என்று தெரிகிறது.
இதனால் முதலீட்டாளர்கள் முதலீ்ட்டை திரும்பப் பெறும்போது டாலர் மதிப்பானது வலுவடைந்து ரூபாய் மதிப்பு சரிகிறது. காலை 9:40 மணியளவில் சென்செக்ஸ் 131.36 புள்ளிகள் (அல்லது) 0.24 % சரிந்து 54,389.79 புள்ளிகளிலும், நிப்டி 25.55 புள்ளிகள் (அல்லது) 0.16 % சரிந்து 16,252.95 புள்ளிகளிலும் இருந்தது. நிப்டி 50 பங்குகளில் 29 பச்சை நிறத்திலும், மீதம் உள்ளவை சிவப்பு நிறத்திலும் உள்ளதாக தேசியபங்குச் சந்தை தரவு காட்டியது. ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து சரிந்து வருவதால், உள்நாட்டு பங்குச் சந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.