இணையதளம் வாயிலாக திருமணம் செய்து கொள்வதற்கு நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குளம் பகுதியில் வம்சி சுதர்ஷினி (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் நான் இன்ஜினியரிங் படித்துள்ளேன். இந்தியாவைச் சேர்ந்த ராகுல் என்பவரும் நானும் காதலித்து வருகிறோம். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று அமெரிக்காவில் வசித்து வருகிறார். நாங்கள் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம். நாங்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள். இங்குள்ள சிறப்பு திருமண சட்டப்படி திருமணம் செய்து கொள்ள அனுமதி பெற்றுள்ளோம். இந்த சட்டத்தின் மூலம் திருமணம் செய்து கொள்வதற்காக இணையதளத்தில் கடந்த மே மாதம் 5-ம் தேதி விண்ணப்பித்தோம். அதன் பிறகு திருமண பதிவு அதிகாரி முன்பாக நேரில் ஆஜராகினோம்.
ஆனால் பதிவு அதிகாரி எங்கள் திருமணம் தொடர்பாக முடிவு செய்ய 30 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டதால் நாங்கள் காத்திருந்தோம். ஆனால் 30 நாட்கள் முடிவடைந்தும் பதிவு அதிகாரி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னுடைய வருங்கால கணவர் ராகுலுக்கு இந்தியாவில் தங்குவதற்கான கால அவகாசம் முடிவடைந்ததன் காரணமாகவும், விடுமுறையை நீட்டிக்க முடியாததாலும் அவர் மீண்டும் அமெரிக்காவுக்கு சென்று விட்டார். இருப்பினும் ராகுல் என்னுடைய திருமணம் குறித்து முழு உரிமையும் எடுப்பதற்கு எனக்கு அதிகாரம் இருக்கிறது என்று கூறி பிரமாண பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்.
அவர் இந்தியா வந்தால் அதிக அளவில் பொருட்செலவு ஆகும் என்பதால் நாங்கள் வீடியோ காலில் திருமணம் செய்து கொள்வதற்கு முடிவு செய்துள்ளோம். எங்களுடைய திருமணத்தை சிறப்பு பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய தாங்கள் உத்தரவு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திருமணம் என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம் என்பதால், வீடியோ கால் மூலம் திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதி வழங்கியதோடு, உரிய முறையில் திருமண பதிவு செய்து சான்றிதழ் கொடுக்க வேண்டும் என சார்பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.