புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது பேரவையில் பெரும்பான்மை நிரூபிப்போம் என புதுவை முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பாக தற்போது 10 சட்டமன்ற உறுப்பினர்கள், அதன் கூட்டணியில் இருக்கக்கூடிய திமுகவில் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் என்று ஆளும் கூட்டணியின் பலம் பேரவையில் 14 ஆக உள்ளது. இதேபோல எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் 7 சட்டமன்ற உறுப்பினர்கள்,
அதன் கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கு 4 உறுப்பினர்கள், பாஜக சட்டமன்ற நியமன உறுப்பினர்கள் 3 பேர் என்று எதிர் கட்சிகளின் பலமும் 14ஆக இருக்கக் கூடிய நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி தரப்பில் சொல்லப்பட்டது. தற்போது பெரும்பான்மையை நாங்கள் நிரூபிப்போம் என்று நாராயணசாமி திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.
மேலும் புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா இல்லை என்று கூறிய நாராயணசாமி, இதனை நாங்கள் ஜனநாயக பூர்வமாக எதிர்கொள்வோம். புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது.இந்திய அரசியல் சாசனப்படி புதுச்சேரி அரசு செயல்படும் எனவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.