ரேஷன் கடைகளில் பொருட்களைப் பெற வாடிக்கையாளர்கள் விரல் ரேகை பதிவு அமலுக்கு வந்த நிலையில், அதை செய்ய இயலாதபடி சர்வர் பிரச்னை ஏற்படுவதாக அமைச்சரே அறிவிப்பது நகைப்புக்குரியது என அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ரேஷன் கடைகளில் வாடிக்கையாளர்கள் விரல் ரேகை வைத்த பின்னரே பொருள் வாங்க வேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், அதை செய்ய இயலாதபடி சர்வர் பிரச்னை ஏற்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சரே அறிவிப்பது நகைப்புக்குரியதாக உள்ளதாக விமர்சித்துள்ளார்.
ஒரு புதிய நடைமுறையைச் செயல்படுத்துவதற்கு முன்னர் அதற்கான கட்டமைப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருக்க வேண்டாமா? எனக் கேள்வி எழுப்பிய அவர், அதைத் தொடங்கிய பின்னர் சர்வர் பிரச்னை எனக் கூறுவதில் அரசின் திறனற்ற தன்மையே வெளிப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 நாட்களாக சரி செய்யப்படாமல் உள்ள சர்வர் பிரச்னையை உடனடியாக சரி செய்து, அறிவித்தபடி பொங்கல் பரிசுகள் வழங்கும் பணியை விரைந்து செய்திட வேண்டுமென தமிழக அரசை திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.