கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. அதனால் மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் நிலையில் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இருந்து 11 ஆயிரம் கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோதையாறு, திற்பரப்பு மற்றும் தாமிரபரணி ஆறு போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தண்ணீர் ஓடுபாதையில் அமைந்துள்ள குளங்கள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியதால் காட்டாற்று வெள்ளம் குடியிருப்புக்குள் புகுந்து உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த கோவில்களில் 108 திவ்யதேச கோவில்களில் ஒன்றாக திகழும் திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில் அருகில் அமைந்துள்ள குளம் காட்டாற்று வெள்ளத்தால் நிரம்பி கோவிலுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கோவில் வளாகம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகள் கோவில்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மழைநீர் புகுந்து வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. அதனால் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுவரை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில் மழை காரணமாக கன்னியாகுமரியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட்டு உடனே நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மனோ தங்கராஜ் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.