நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில் சென்னை தினத்தை முன்னிட்டு மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நகர்ப்புற வளர்ச்சித் அமைச்சர் கே.என்.நேரு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இந்நிலையில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் மேயரை பதில்சொல்ல அறிவுறுத்தியுள்ளார்.
அப்போதுமேயர் தான் பேசலாமா..? என்பதை மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்தி கொள்வதற்காக அமைச்சரை பார்க்க, அவர் சொல்லுமா என உச்சஸ்துதியில் மிரட்டுவது போல் தெரிவித்தார். இதனை எதிர்பார்க்காததால் சற்று திடுக்கிட்ட மேயர் ஒரு வழியாக சூழலை சமாளித்து விட்டார். அதேபோன்று நிகழ்ச்சி முடிந்ததும் புகைப்படக்காரர்கள் சிலர், குழு புகைப்படம் எடுப்பதற்காக மேயரை நிற்குமாறு கோரிக்கை வைக்க வந்தனர். ஆனால் அதை மேயர் கவனிக்காததால், அமைச்சர் நேரு குறுக்கிட்டு “அம்மா நிப்பியாம் அப்டியே” என கூறினார்.
அமைச்சரின் இந்த பேச்சு சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. அத்துடன் ஒரு மேயருக்கு தி.மு.க மூத்த அமைச்சர் கொடுக்கும் மரியாதை இதுதானா..? மேலும் மேயரை ஒருமையில்பேசலாமா? இதில் மேயர் பட்டியல் இன பெண் என்பதால்தான் அமைச்சர் இப்படி நடந்து கொண்டாரா? என்றெல்லாம் நெட்டிசன்கள் வறுத்தெடுக்க தொடங்கினர். இந்த நிலையில் “அமைச்சர் தன்னை ஒருமையில் பேசவில்லை, உரிமையில்தான் பேசியுள்ளார். என்னை தனது மகள்போல் பார்த்து கொள்கிறார் எனகூறி மேயர் பிரியா பிரச்சனையை முடித்துவைக்க முயற்சித்துள்ளார். ஆகவே மேயரின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, இவ்விவகாரத்தை நெட்டிசன்கள் முடிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.