Categories
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக மனு தாக்கல்…. தமிழக அரசு ஐகோர்ட்டில் தகவல்..!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தற்போது தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருக்கக்கூடியவர் செந்தில் பாலாஜி. இவர் கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்ததாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாய ராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது பல்வேறு பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வழக்கை ரத்து செய்ய கோரி செந்தில்பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்றைய தினம் நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி சென்னை உயர் மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் அமலாக்க துறையையும் ஒரு வாதியாக இணைத்துக்கொள்ள வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்கு அமலாக்க துறையை இந்த வழக்கில் ஒரு வாதியாக சேர்த்துக்கொள்வதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான இத்தனை வழக்குகளில் அமலாக்கத்துறை தங்களையும் ஒரு மனுதாரராக இணைத்துள்ளது என்ற ஒரு கேள்வியையும் செந்தில் பாலாஜி தரப்பு எழுப்பியது.

இதனையடுத்து வழக்கை ரத்து செய்ய கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்துள்ள இந்த மனு குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கினுடைய விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.

 

Categories

Tech |