நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது அங்குள்ள விநாயகர் கோயிலில் யானைகள் பூஜை செய்வதைக் காண அமைச்சர் சென்றார்.
அப்போது கோயிலுக்குள் செல்ல அமைச்சர் சீனிவாசன் தனது காலணியை அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து, கழற்ற வைத்தார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனம் எழுந்தது. இதனையடுத்து உதகையில் செய்தியாளர்களைச் சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன், தனது செயலுக்கு வருத்தம் தெரித்தார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட, அச்சிறுவன் கேத்தன் தெப்பக்காடு பகுதி ஆதிவாசி மக்களுடன் சென்று, அமைச்சர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் அச்சிறுவனை வெள்ளிக்கிழமை காலை காவல் நிலையத்திற்கு வருமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்