அமைச்சர் முன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரனூர் பகுதியில் குருவி- ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ராஜேஸ்வரியின் வீடு இடிந்து விழுந்தது. இதற்கான நிவாரண தொகை கேட்டு ராஜேஸ்வரி மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் குந்தா தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மனுக்களை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் ராஜேஸ்வரி அமைச்சருக்கும் முன் சென்று தனது உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் ராஜேஸ்வரியை காப்பாற்றினார். அப்போது பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் சேதமடைந்த வீட்டுக்கான நிவாரணத் தொகையை வழங்கவில்லை என ராஜேஸ்வரி அமைச்சரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து புதிதாக ராஜேஸ்வரிக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டுமென அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.