தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் பரிசோதனை எண்ணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்றுமுதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வருகின்ற ஏழாம் தேதி பொறுப்பேற்கிறார். இதனையடுத்து மருத்துவ பரிசோதனைகள், மருந்து மாத்திரைகள், உபகரணங்கள், தடுப்பூசிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆம்புலன்ஸ் என ஒவ்வொன்றும் தமிழகம் முழுக்க வெவ்வேறு கட்டங்களில் பன்மடங்கு வசூலிக்கப்படுகிறது. கொள்ளைநோய் காலத்தில் ஒரே மாதிரியான கட்டணமே தமிழகம் முழுக்க உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் நிர்ணயிக்கப்பட்ட வேண்டும் என்று கமல் கோரிக்கை விடுத்துள்ளார்.