மண்பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மண் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் குறிச்சியில் தொழிலாளர்கள் 1/2 கிலோ முதல் 1 1/2 கிலோ அரிசி வரை வேக வைக்கும் வகையில் வெவ்வேறு அளவுகளில் பானைகளை தயார் செய்து வருகின்றனர். மேலும் குழந்தைகள் விளையாடுவதற்காக சிறிய அளவிலான அடுப்பு, அம்மிக்கல், ஆட்டு உரல் போன்றவற்றையும் தயாரிக்கின்றனர்.
இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறும் போது, நாகர்கோவில், புதுச்சேரி, சென்னை, பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு வியாபாரிகள் இந்த பானைகளை வாங்கி செல்கின்றனர். இந்த ஆண்டு பொங்கல் பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குளத்திலிருந்து மண் எடுத்து கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. எனவே மண்பாண்டத் தொழிலில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அருகில் இருக்கும் குளங்களில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் மண் அள்ளி கொள்ள அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.