Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

தென்மாவட்டங்களில் நெற்களஞ்சியமாக அம்பாசமுத்திரம் பகுதி விளங்குகிறது. அம்பை 16 என ஊரின் பெயரிலேயே நெல் ரகம் இருப்பது பகுதியின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. பத்தமடை பகுதியில் தயாரிக்கப்படும் பாய்கள் மிகப் புகழ் பெற்றவையாகும். அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள் 1 முறை வெற்றி பெற்றுள்ளார். ஸ்தாபன காங்கிரஸ் 1 முறையும், காங்கிரஸ் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 5 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. தற்போது அதிமுகவின் முருகையா பாண்டியன் எம்எல்ஏவாக உள்ளார். அம்பாசமுத்திரம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,44,048 ஆகும். அம்பாசமுத்திரம் பகுதியில் நூற்பாலைகள் நலிவடைந்ததால் இளைஞர்கள் வேலை தேடி பெருநகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் உபரி நீர் வீணாவதை தவிர்க்க தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. நெல் கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டடம் தேவை என்பதும், காய்கறி, பூ வகைகளை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. அகத்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அணை போன்ற பகுதிகளை சுற்றுலா தளமாக அறிவித்து மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்பது மக்களின் முக்கிய கோரிக்கை. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மயிலாறு, சின்னமயிலாறு, காணி குடியிருப்பு, சேர்வலாறு, காரையார் பகுதிகளில் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Categories

Tech |