மும்பையில் உள்ள முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடி பொருட்களுடன் கார் கண்டறியப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீடு உள்ளது. இது பல சொகுசு வசதிகளுடன் கட்டப்பட்ட 27 மாடி கட்டிடம் ஆகும். இந்தியாவிலேயே மிக விலை உயர்ந்த வீடு இதுதான். இந்நிலையில் அந்த வீட்டின் அருகே உள்ள ரோட்டில் நேற்று சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அது பற்றி அறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அந்த மர்ம காரில் ஜெலட்டின் குச்சிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதன்பிறகு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து காரில் இருந்த வெடிகுண்டுகளை நிபுணர்கள் கைப்பற்றினர். அதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மேலும் மும்பை நகரம் முழுவதும் விடிய விடிய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அம்பானி வீடு அருகே ஜெலட்டின் குச்சிகள் அடங்கிய காரை நிறுத்தி சென்றது யார்? என தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.