சட்டமேதை அம்பேத்கருக்கு தமிழில் கையெழுத்து போட கற்றுக் கொடுத்தவர் ரெட்டைமலை சீனிவாசன் என சீமான் பெருமிதம் தெரிவித்தார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கின்ற, உயர்வு தாழ்வு பாராட்டுகிற, வர்ணாசிரம தர்மத்துக்கு எதிராக ஒரு புதிய கோட்பாட்டை, புதிய கொள்கையை நாம் உருவாக்கிக் கொள்ளாதவரை நம் அடிமைநிலை மாற போவதில்லை என்று எங்களுக்கெல்லாம் கற்பித்த எங்களுடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவை போற்றுகின்ற நாள் இன்று.
பறையன் என்று எவனாவது உன்னை சொன்னால்…. யார் பறையன் என்று கேட்டால் நான் தான் என்று எழுந்து, நிமிர்ந்து நில். எந்த சொல் இழிச் சொல் என்று உன் மீது சுமத்தப்படுகிறதோ அந்த சொல்லை எழுச்சி சொல்லாக மாற்றாதவரை உனக்கு விடுதலை இல்லை, உயர்வு இல்லை என்று கற்பித்த புரட்சியாளர் எங்களுடைய தாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்கள்.
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கருக்கு முன்பு இந்த மண்ணிலே ஒடுக்கப்பட்ட தமிழ் சமூகம், ஒடுக்கப்பட்ட மானுடர்களின் உயர்வுக்கு அரும்பாடுபட்ட பெருந்தகை எங்களுடைய தாத்தா என்ற பெருமை எமக்கு உண்டு. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கருக்கு தமிழில் கையெழுத்திடவும், திருக்குறளைப் பற்றியும் கற்றுக் கொடுத்தவர் எங்க தாத்தாஎன்கின்ற பெருமை எங்களுக்கு உண்டு.
அப்படிப்பட்ட பெருமகனாரின் நினைவு போற்றுகின்ற இந் நாளில் சாதி மத வேறுபாடற்ற, ஒரு சமத்துவமான மானுடர்கள் உலகம் படைப்பதற்கு அரும்படற்றிய எங்கள் தாத்தா வழியில் நின்று, நாங்கள் தொடர்ந்து அந்த கருத்திலே உறுதியாக நின்று போராடி, வெற்றி அடைவோம் என்ற உறுதியை ஏற்படுத்து தான் அவருக்கு நாங்கள் செய்கின்ற உண்மையான வணக்கமாக,
மதிப்பாக இருக்க முடியும். அந்த உறுதியை நாம் தமிழர் பிள்ளைகள் உளமாற ஏற்கின்றோம். எங்களுடைய தாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களுக்கு பெருமிதத்தோடும், திமிரோடும் நாம் தமிழர் பிள்ளைகள் புகழ் வணக்கத்தை செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம் என சீமான் தெரிவித்தார்.