டாக்டர் அம்பேத்கரின் படம் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தாழக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மேலகாலனி சந்திப்பு உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அம்பேத்கர் சிலை பொறிக்கப்பட்ட கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி தோவாளை தாசில்தார் தாஜ்நிஷா, வருவாய் ஆய்வாளர் லெனின், கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி, பேரூராட்சி செயல் அலுவலர் அப்துல்காதர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இவர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை அகற்ற முயன்றுள்ளனர்.
ஆனால் அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதிகாரிகள் சிலையை அகற்றுவதில் உறுதியாக இருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் குமார், ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான காவலர்கள் விரைந்து சென்றனர். அதன்பிறகு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அரசின் அனுமதி பெற்ற பிறகு கல்வெட்டை திறக்க வேண்டும் என அதிகாரிகள் கூறினர். இதனையடுத்து கல்வெட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்து விட்டு அங்கிருந்து சென்றனர்.