திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் படிப்புகள் சார்ந்த துறையை துவங்கக் கோரிய வழக்கில் பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பல்கலைக்கழக சிண்டிகேட் முன்னாள் உறுப்பினரும் மற்றும் ஓய்வுபெற்ற பேராசிரியருமான இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் படிப்புகள் என்ற பெயரில் தனி துறையை அமைக்க 2006 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானமானது நிறைவேற்றப்பட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து இந்த தீர்மானத்தின் அடிப்படையில் கடந்த 2007-ஆம் ஆண்டு பல்கலைக்கழக கல்வி குழுமம் என்ற புதிய துறையை தொடங்க ஒப்புதல் அளித்ததாகவும், மேலும் 2008ஆம் ஆண்டு அம்பேத்கர் படிப்புகள் துறை அமைக்க பல்கலைக்கழக வேந்தருக்கு பரிந்துரைக்கப் பட்டதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, இப்புதிய துறையை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத பல்கலைக்கழகம், பல புதிய துறைகளை தொடங்கியுள்ளதாகவும், அம்பேதர் படிப்புகள் துறையை தொடங்க கோரி, மனுக்களை அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது விண்ணப்பங்களை பரிசீலித்து திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் படிப்புகள் என்ற துறையை தொடங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து, இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி, பல்கலைக்கழகத்துக்கும், மற்றும் தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.