காதலி பிரிந்து சென்ற ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணகுமார் அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சரவணகுமார் அந்த இளம் பெண்ணும் திடீரென மாயமானார்கள். இதுகுறித்து அந்த இளம் பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இளம்பெண் சரவணகுமாருடன் கொடைக்கானலில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் சரவணகுமார் மற்றும் அந்த இளம்பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது அந்த இளம் பெண் தனது பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் காவல்துறையினர் இளம்பெண்ணை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.
அதன்பின் காதலி பிரிந்து சென்ற ஏக்கத்தில் இருந்த சரவணகுமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணகுமாரின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.