மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் இயங்கக்கூடிய GTL Infrastructure Limited என்ற நிறுவனம் தமிழ்நாட்டில் பல்வேறு நெட்வொர்க் தேவைகளுக்காக 6000 மேற்பட்ட செல்போன் டவர்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இதன் தலைமையகம் சென்னை புரசைவாக்கத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் நஷ்டத்தின் காரணமாக இந்த நிறுவனம் மூடப்பட்டது. இதற்கு சொந்தமான டவர்கள் செயல்படாமல் இருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இந்த டவர்கள் கண்காணிப்பு இல்லாமல் செயல்படாமல் இருந்துள்ளது. இதனையடுத்து தற்போது வேறு பல தேவைகளுக்காக இந்த நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் டவர்களை சோதனையிட சென்றுள்ளனர். அப்போது டவர் இருந்த இடங்களில் டவர் இருந்த தடயம் கூட இல்லாதவாறு, அதை யாரோ திருடிச் சென்றனர்.
இதுகுறித்து நிறுவன அதிகாரிகள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்க தொடங்கிய போது ஒரு டவர் மட்டும் காணாமல் போகவில்லை. தமிழ்நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட டவர்கள் காணாமல் போனது என்று தெரியவந்தது. இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியது, காவல்துறை உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்தால்தான் இன்னும் இருக்கக்கூடிய டவர்களை காப்பாற்ற முடியும். ஒரு டவர் அமைப்பதற்கு ரூ.25 லிருந்து ரூ.45 லட்சம் வரை செலவாகும். தற்போது காணாமல் போன ஒட்டுமொத்த டவரின் மதிப்பு கோடிக்கணக்கில் போகும். அதனைப் போல இந்த ஜனவரி மாதத்தில் கூட மதுரை கூடல் புதூர் நகரில் அமைக்கப்பட்டிருந்த வோடோபோன் கம்பெனிக்கு சொந்தமான ரூ.28 லட்சம் மதிப்புள்ள டவர் ஒன்று திருடப்பட்டுள்ளது. மேலும் இந்த நூதன திருட்டு கும்பலால் டவர் நிறுவன முதலாளிகள் அச்சத்தில் உள்ளனர்.