திருப்பதியில் தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அனைத்து மாநிலங்களிலிருந்தும் தினம் தோறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது போல கோவில் உண்டியலும் நாள்தோறும் நிரம்பி வழிந்து கொண்டே வருகிறது.சராசரியாக பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை கணக்கிட்டால் தினம்தோறும் பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
உலகிலேயே பெரிய பணக்கார சாமி என்று சொல்லும் அளவிற்கு திருப்பதி ஏழுமலையானுக்கு கோடிக்கணக்கில் குவிந்து வரும் உண்டியல் காணிக்கை மட்டுமல்லாமல் பல்வேறு கட்டண தரிசனங்கள், லட்டு விற்பனை மற்றும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் முடியை ஏலம் விடுவது, திருமண மண்டபங்கள் என பல விதங்களில் கோடிக்கணக்கில் தினம்தோறும் வருவாய் கிடைக்கிறது.
இந்த பணத்தை கொண்டு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வீட்டுமனை மற்றும் நிலம் போன்ற அசையா சொத்துக்களை தேவஸ்தானம் வாங்கியுள்ளது. அதன்படி சுமார் 950 எண்ணிக்கையிலான அசையா சொத்துக்களின் இன்றைய மதிப்பு 85,705 கோடி ரூபாய் என பலரையும் வியக்க வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஏழுமலையான் கோவிலுக்கு அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.