திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள எட்டிக்குளத்துப்பட்டியில் சின்னதண்ணன், கசுவம்மாள், மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கோவிலில் திருவிழா நடத்த விழா குழுவினர் முடிவு செய்தனர். இதனையடுத்து நேற்று முன் தினம் கோவிலில் விழா தொடங்கியது. அப்போது கோவிலில் சன்னதியில் இருந்து மின்னொளி ரத்தத்தில் சாமிகள் எழுந்தருளி வீதி உலா வந்தனர். அப்போது பக்தர்களின் சேர்வையாட்டம், கரகாட்டம், வானவேடிக்கை உள்ளிட்டவை நடைபெற்றது. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பது, பூசாரிடம் பக்தர்கள் சாட்டையடி வாங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதற்கு முன்னதாக காலையில் சுவாமி அந்த ஊர் குளத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கோவிலின் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து குழந்தைகளுக்கு முடி எடுத்தல், காது குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கோவிலில் நடைபெற்றது. மேலும் பெண்கள் தாங்கள் பிறந்த வீட்டில் வாங்கித் தந்த கூரை புடவையை கசுவம்மாள் கோவிலில் வைத்து வழிபாடு செய்தனர். அதன் பிறகு அதனை உடுத்து முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கிடையில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, சாட்டை அடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத வழிபாடு முறையை காண பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கோவிலில் குவிந்தனர். மேலும் திருவிழாவில் இன்று பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.