காவேரிப்பாக்கம் அருகே உயிர் இழந்த தாயின் காரிய நிகழ்ச்சியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அக்காவை அடித்துக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்துள்ள சிறுகரும்பூர் என்ற கிராமத்தில் 50 வயதுடைய சாந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் தனது மகளை, உடன் பிறந்த தம்பி ஜோதி என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் ஜோதியின் தாய் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதனால் நேற்று முன்தினம் இரவு காரிய நிகழ்ச்சி நடந்தது. அதற்காக அக்கம்பக்கத்தினர் வரவழைக்கப்பட்டு இறந்தவருக்கு பூஜை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது ஜோதி குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அதுமட்டுமன்றி எனக்கு பசிக்கிறது உடனடியாக சாப்பாடு போடு என்று அக்காள் சாந்தியிடம் கூறியுள்ளார். அதற்கு சாந்தி, அம்மாவின் காரிய நாளில் கூட குடித்துவிட்டு வந்திருக்கிறாயே என்று கூறியுள்ளார்.
அதனால் மிகுந்த ஆத்திரம் அடைந்த ஜோதி, எனது வீட்டிற்கு வந்து என்னையே கேள்வி கேட்கிறாயா? என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதுமட்டுமன்றி சாந்தியின் தலைமுடியைப் பிடித்து மார்பின் மீது உதைத்து தாக்கியுள்ளார். அதனால் மயக்கம் அடைந்த சாந்தியை, உறவினர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சாந்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்த காவேரிப்பாக்கம் போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதியை கைது செய்துள்ளனர்