அம்மா உணவகத்தில் போதுமான வருமானம் இல்லை என்று ஊழியர்களை பணி நீக்கம் செய்வது குறித்து முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 2013 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவக திட்டத்தை ஆரம்பித்து 3 வேளையும் குறைந்த விலையில் உணவு வழங்கினார். இந்த திட்டம் ஏழை எளிய மக்களுக்காக தொடங்கப்பட்டு லட்சக்கணக்கானவரின் பசியைப் போக்கி வருகிறது. சென்னை மாநகராட்சியில் 403 அம்மா உணவகங்களில் 4,000 பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு மாதம் 9,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மே மாதம் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அம்மா உணவகத்தை மூடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மா உணவகங்கள் நஷ்டத்தில் செயல்படுவதாக கூறி ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றைக் கண்டித்து அன்மையில் முதல்வர் முக. ஸ்டாலினிடம் நியாயம் கேட்க சென்ற அம்மா உணவக பெண்கள் அவரை சந்திக்க முடியாமல் திரும்பினர்.
மேலும் கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மக்களுக்கு உணவு வழங்கிய தங்களை திமுக அரசு அப்புறப்படுத்த நினைப்பது வேதனையளிக்கிறது என்றும, முந்தைய ஆட்சிக் காலத்தில் ஏற்படாத நஷ்டம் இப்போது மட்டும் எப்படி வந்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் ஏழை எளிய மக்களுக்காக பாடுபடுவேன் என்று கூறிய, முதல்வர் முக. ஸ்டாலின் அம்மா உணவகத்தில் என்ன நடக்கிறது என்று உடனடியாக தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அம்மா உணவக ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.