தமிழக முதல்வரை வரவேற்க ஆட்களை ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்து விபத்தில் 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெயலலிதா திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்காக இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று திருக்கோவிலை திறந்து வைக்கின்றனர். விழாவிற்காக மதுரை விமானநிலையம் வரும் முதல்வருக்கு விமான நிலையத்திலிருந்து, குன்னத்தூர் வரை 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரவேற்புக் கொடுக்கும் விதமாக திருமங்கலம் மதுரை மாவட்டம் முழுவதும் இருந்து அதிமுக தொண்டர்கள் வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர்.
இதில் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே பெரிய பூலாம்பட்டி கிராமத்திலிருந்து மினி வேனில் 30க்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றிக்கொண்டு பேரையூர் வழியாக குன்னத்தூர் நோக்கி வந்துகொண்டிருந்தது. மினிவேன் கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சி பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மினிவேன் சாலையோர பள்ளத்தில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மினிவேன் கவிழ்ந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பேரையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் நான்கு பேர் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் காயமடைந்த 26 பேருக்கு பேரையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கல்லுப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
முதல்வரை வரவேற்க சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிக்கொண்டு வந்த மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.