ஜெயலலிதாவின் மணிமண்டபத்தை திறப்பு விழாவிற்கு அமைச்சர் அதிமுக தொண்டர்களுடன் ஒரு ரயிலையே புக் செய்து வந்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று திறந்துவைக்க இருக்கின்றனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக மதுரை மாநகர் பகுதியில் இருந்து 1,500 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தனி ரயில் மூலம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அழைத்துக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இரவு எட்டு மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் அதிகாலை சென்னைக்கு வந்துள்ளது.
இதையடுத்து ஜெயலலிதாவின் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு பிறகு மீண்டும் இன்று மாலை 5 மணிக்கு அந்த ரயில் மூலமாக தொண்டர்கள் மதுரைக்கு திரும்புகின்றனர். இந்த ரயிலில் தொண்டர்களுடன் அமைச்சர் செல்லூர் ராஜு தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து பயணித்துள்ளார். இதையடுத்து மதுரை ரயில் நிலையத்தில் நாட்டுப்புற கலைஞர்களை கொண்டு கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, நடன குழு மேளதாளங்கள் முழங்க தொண்டர்களை அமைச்சர் அழைத்து வந்துள்ளார். ரயில் பயணம் செய்தேவர்களுக்கும் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுத்துள்ளார்.