ஆன்லைனில் ரம்மி விளையாட தாய் பணம் தராததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பலோடை கிராமத்தில் வசித்து வருபவர்
மாடசாமி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது இளைய மகனான பிரகாஷ் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வந்ததோடு தனது தந்தையுடன் சேர்ந்து சென்டிங் வேலைக்கு சென்று கொண்டிருந்துள்ளார்.
மேலும் தனது தாய் தந்தை மற்றும் சகோதரனிடம் இருந்து கேம்பஸ் இன்டர்வியூ செல்ல வேண்டும் என்றும், கோச்சிங் கிளாஸ் என்றும் பணத்தை வாங்கியதோடு அவர் சம்பாதித்த பணத்தையும் வீட்டில் தராமல், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதியன்று தனது தாயிடம் எனக்கு 10,000 ரூபாய் அவசரமாக வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அப்போது பிரகாஷின் தாய் அவரை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்து போன அவர் தாயின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனை பார்த்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த சில ஆண்டுகளாக பிரகாஷ் ஆன்லைனில் ரம்மி விளையாடி, அதற்கு அடிமையாக இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் சுமார் ரூபாய் 3 லட்சம் வரை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பிரகாஷ் இழந்ததும் தெரியவந்துள்ளது.