அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுகின்ற இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளதாக கூறி, கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி கரசேவகர்கள் அதனை இடித்து தரைமட்டமாக்கினர். அது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங், சாத்வி ரிதம்பரா, வினய் கட்டியார் உள்ளிட்டவர்கள் மீது உத்திரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இருக்கின்ற சிபிஐ தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை தற்போது வரை நடந்து கொண்டிருக்கிறது.
அந்த வழக்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் விசாரணை செய்து தனிக்கோர்ட்டு தீர்ப்பு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடந்த மே மாதம் எட்டாம் தேதி உத்தரவிட்டிருந்தது. அதன்பிறகு அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 32 பேர் இடம் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 313 கீழான விசாரணையை சிபிஐ தனி நீதிமன்றம் நடத்தி முடித்துவிட்டது. அதேசமயத்தில் வழக்கு தொடர்பான விசாரணையை முடித்து, தீர்ப்பு வழங்குவதற்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என சிபிஐ தனி நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ், சுப்ரீம் கோர்ட்டுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
அதனை பரிசீலனை செய்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆர்.எப். நாரிமன், நவீன் சின்கா, இந்திரா பானர்ஜி ஆகியோர் உள்ளடங்கிய அமர்வில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க சிபிஐ தனி நீதிமன்றத்திற்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கு விசாரணையின் தீர்ப்பு வருகின்ற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.நேற்று முன்தினம் லக்னோ சிபிஐ தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடைசியாக விசாரணை செய்தது.
விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 32 பேர் தரப்பிலான வக்கீல்களின் சிலர் நேரிலும், மற்றவர்கள் காணொலிக் காட்சி மூலமாக ஆஜராகி தங்கள் இறுதி வாதத்தை முன்வைத்தனர். அதன் பிறகு விசாரணை முடிந்த நிலையில், சிபிஐ தனிக்கோர்ட்டு நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார். இந்த மாதம் முப்பதாம் தேதி வரை சுப்ரீம் கோர்ட் அவகாசம் வழங்கி இருப்பதால் அதற்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தீர்ப்புக்காக வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முன் வைக்குமாறு நீதிபதி சுரேந்திர குமார், நீதிமன்ற ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.