Categories
தேசிய செய்திகள்

அயோத்தி ராமர் கோயில் கட்டமைப்பு!

கோயிலின் அதிமுக்கியமான கர்ப்ப கிரகம், ராமர் சீதாதேவி சிலை தரை தளத்திலே அமைக்கப்படும். மேலும், இரண்டாயிரம் அடி ஆழத்தில், டைம் கேப்சூல் (Time capsule) வைக்கப்படும். இது எதிர்காலத்தில் ராமர் கோயிலின் வரலாறை படிக்க விரும்புவோருக்கு உதவியாக இருக்கும்.

அயோத்தி:

அயோத்தி ராமர் கோயிலுக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழா காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளை, 3.5 ஆண்டுகளில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கோயில், உலகின் மிகப்பெரிய இந்து கோவில்களில் ஒன்றாக இருக்கும்.

பூமி பூஜை என்றால் என்ன?

பூமி பூஜை என்பது ஒரு வழக்கமான சடங்காகும், இது விவசாயம், கட்டுமானம் உள்ளிட்ட நோக்கங்களுக்காக நிலத்தில் பணிகளை தொடங்குவதற்கு முன்னதாக செய்யப்படுகிறது. அன்னை பூமியும், இயற்கையும் இந்து மதத்தில் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகின்றன. ஆகவே, இயற்கையின் அன்னையான பூமாதேவியை வணங்கி, அன்னையின் ஆசிர்வாதத்துடன் பணிகள் தொடங்கப்படுகின்றன.

ராமர் கோயிலின் அமைப்பு:

உத்தேசமாக ராமர் கோயிலின் அஸ்திவாரம் 15 அடி ஆழத்தில் இருக்கும். இது 8 அடுக்குகளைக் கொண்டிருக்கும், ஒவ்வொரு அடுக்கும் இரண்டு அடி அகலம் கொண்டதாகும். ராமர்  கோயிலின் உயரமும் 161 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னர் 141 அடியாக இது இருக்கும் என முன்மொழியப்பட்டது. கோயிலில் 5 குவிமாடங்கள் கொண்டிருக்கும். கட்டமைப்பின் அகலம் 140 அடி ஆகும். 69 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இது உலகின் ஐந்து கோபுரங்களைக் கொண்ட ஒரே கோயிலாகும்.

இந்தக் கோயிலில் மூன்று தளங்கள் அமைக்கப்படும். அதில் ஒவ்வொரு தளத்திற்கும் 106 தூண்கள் வீதம் மொத்தம் 318 தூண்கள் நிறுவப்பட உள்ளன. இந்த தூண்கள் அனைத்தும் இந்து புராணங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்படும். தூண்களில் அனுமன், கிருஷ்ணர் போன்ற பிற கடவுள்களின் சிலைகள் இந்து மத புனிதர்களின் ஆலோசனையின் பேரில் வடிவமைக்கப்படும்.
இந்தக் கோயில் முதலில் இரண்டு தளங்களைக் கொண்டிருக்கும் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தற்போது, கோயிலின் மேம்படுத்துவதற்காக மூன்றாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கர்ப்ப கிரகம்:

இந்தக் கோயிலில் பக்தர்கள் அமர்ந்து பிரார்த்தனை செய்யக்கூடிய வகையில் பல பகுதிகள் இருக்கும். பக்தர்களின் வழிபாட்டு நடமாட்டத்தை (பரிக்ரமா) அனுமதிக்கும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கோயிலுக்குள் சிங் துவார், நிருத்யா மண்டம் ராண்ட் மண்டம், பூஜை அறை உள்ளிட்ட மண்டபங்கள் அமைக்கப்படும். கோயிலின் அதிமுக்கியமான கர்ப்ப கிரகம், ராமர் சீதாதேவி சிலை தரை தளத்திலே அமைக்கப்படும்.

டைம் கேப்சூல்:

இதுமட்டுமின்றி கோயிலின் இரண்டாயிரம் அடி ஆழத்தில், டைம் கேப்சூல் (Time capsule) வைக்கப்படும். இது எதிர்காலத்தில் ராமர் கோயிலின் வரலாறை படிக்க விரும்புவோருக்கு உதவியாக இருக்கும்.

கோயிலின் செங்கல், மணல், மண்:

பிகாரின் கயா தாமில் இருந்துவரும் 40 கிலோ வெள்ளி செங்கல் மற்றும் பால்கு ஆற்றிலிருந்து மணல் ஆகியவை கோயிலின் அஸ்திவாரம் அமைக்க பயன்படுத்தப்படும்.
‘பூமி பூஜை’ விழாவின் போது கருவறைக்குள் ஐந்து வெள்ளி செங்கற்கள் அமைக்கப்படும். ஐந்து செங்கற்கள் இந்து புராணங்களின்படி ஐந்து கிரகங்களை குறிக்கும் என்று நம்பப்படுகிறது.

கங்கை, யமுனை, புராணங்களில் நம்பப்படும் சரஸ்வதி நதியிலிருந்து மண்ணும், தண்ணீரும் கொண்டு வந்து பூமி பூஜையில் பயன்படுத்தப்படும். இது தவிர தேசிய தலைநகரிலுள்ள கோயில்கள், குருத்வாராக்கள் உள்ளிட்ட 11 புனித இடங்களிலிருந்து மண், மணல் பயன்படுத்தப்படும்.

ராமர் கோயில் வளாகம்:

ராமர் கோயில் 10 ஏக்கரில் கட்டப்படும், மீதமுள்ள 57 ஏக்கர் கோயில் வளாகமாக உருவாக்கப்படும். இந்த வளாகத்தில் 27 நட்சத்திர மரங்களும் நடப்படும். இதன் நோக்கம், மக்கள் தங்களின் நட்சத்திரத்துக்கு ஏற்ப தங்களின் பிறந்தநாள் தினத்தில் மரத்தின் அடியில் உட்கார்ந்து பிரார்த்தனை செய்வதுடன், சுவாமிக்கு பூஜையும் செய்யவேண்டும் என்பதே. இக்கோயிலின் அடித்தளம் கான்கிரீட் கொண்டு அமைக்கப்பட உள்ளது.

இருப்பினும், கோயில் கட்டுமானத்தில் இரும்பு பயன்படுத்தப்படாது. மேலும், வால்மிகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மரங்களும் ராமர் கோயில் வளாகத்தில் நடப்படும், மேலும் முழு பகுதிக்கும் வால்மிகி ராமாயணத்தின் பெயர்கள் இடப்படும்.ராமர் கோயிலின் வளாகத்திற்குள் ஒரு ‘ராம்கதா குஞ்ச் பூங்கா’ கட்டப்படும், இது ராமரின் வாழ்க்கை மற்றும் பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது. இதுமட்டுமின்றி, ராமர் கோயில் வளாகத்தில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்களின் அருங்காட்சியகமும் கட்டப்படும்.

கோஷாலா, தர்மஷாலா மற்றும் வேறு சில கோயில்கள் போன்ற பிற கட்டுமானங்களும் ராமர் கோயில் வளாகத்தில் கட்டப்படும்.ராமர் கோயிலின் பூமி பூஜைக்காக ஒரு செப்புத் தகடு தயாரிக்கப்பட்டு வருகிறது, அதில் ராமர் கோயில் தொடர்பான முக்கியமான தகவல்கள் சமஸ்கிருத மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன.மேலும், கோயிலின் பெயர், இடம், நட்சத்திரம், நேரம் ஆகியவையும் செப்புத் தட்டில் எழுதப்படும், அவை கோயிலின் அஸ்திவாரத்தில் போடப்படும்.

கோயில் கட்டடக் கலைஞர்கள்:

அயோத்தி ராமர் கோயில் திட்டத்தின் முதன்மை கட்டட கலைஞர் சந்திரகாந்த் சோம்புரா ஆவார். தற்போது அவரின் மகன்களான கட்டட கலைஞர்கள் நிகில் சோம்புரா, ஆஷிஷ் சோம்புரா ஆகியோர் கோயிலின் மாற்றியமைக்கப்பட்ட வடிவமைப்பை தயாரித்துள்ளனர். இக்கோயிலின் திட்ட மதிப்பீடு ரூ.300 கோடி ஆகும். ஆனால் கோயில் வளாகத்தை சுற்றியுள்ள 20 ஏக்கர் நிலத்தை அபிவிருத்தி செய்ய ஆயிரம் கோடி வரை தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்தாண்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பின்படி, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு, அடுத்த மூன்று மாதங்களில் ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது நினைவுக் கூரத்தக்கது.

Categories

Tech |