இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்று கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்லவேறு கட்டுப்பாடுகள் போடப்பட்ட நிலையில் தற்போது அவை படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் கொரோனா முற்றிலும் குணமடையாத காரணத்தால் மக்களிடையே அதை பற்றிய ஒரு அச்சம் இருந்துதான் வருகின்றது. இந்நிலையில் டெல்லியில் இருந்து புனேவிற்கு செல்ல தயாராக இருந்த இண்டிகோ (6E-286) விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்று கூறி மருத்துவ சான்றிதழ்களை காட்டியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் தரை கட்டுப்பாட்டு குழுவினரை தொடர்பு கொண்டு பேசி புறப்பட தயாராக இருந்த அந்த விமானத்தை நிறுத்தியுள்ளனர். அதன்பின்னர் பாதிக்கப்பட்ட அந்த பயணியை டெல்லி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்துள்ளனர்.
அதுமட்டும் இன்றி அந்த பயணியின் வரிசையில் உட்கார்ந்திருந்த மூன்று நபர்களை தனிமை முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விமானம் முழுவதும் கிருமி நாசினி தெளித்துவிட்டு, அதன் பின்னர் பயணிகள் அனைவரும் பாதுகாப்பு கவச உடை அணிந்த பின்னரே அந்த விமானம் புனேவிற்கு புறப்பட்டு சென்றுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.