திரிபுராவில் நடந்த வன்முறையை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், உலகத்தில் அனைத்து நாடுகளும் மதம் சார்ந்து இருக்கும்போது ஏன் இந்தியா மட்டும் மதம் சார்ந்து இருக்கக் கூடாது என்று கேள்வி எழுப்புகிறார். இந்தக் கேள்விகளை 1920-இல் இருந்து தலைவர்கள் எழுப்புகிறார்கள். அனைத்து இந்திய இந்துத்துவ அல்லது பார்ப்பனிய அல்லது சனாதன சக்திகள் இந்தக் கேள்வியை தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அன்றைக்கு இருந்த ஜனநாயக சக்திகளாக விளங்கிய பண்டிட் ஜவஹர்லால் நேரு, காந்தியடிகள், புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் தேசிய அளவிலேயே அந்த சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் இந்த தேசத்தை ஒரு ஜனநாயக இந்தியாவாக கட்டமைப்பதிலேயே உறுதியாக இருந்தார்கள். இல்லையென்றால் இது சனாதன இந்தியாவாகவே நிலைபெற்றிருக்கும்.
கான்ஸ்டிடியூசன் ஆப் இந்தியா என்று சொல்கிறோமே, இந்த அரசியலமைப்புச் சட்டம் அந்த சொல்லுக்கு நேரடியான தமிழாக்கம் என்ன கான்ஸ்டிடியூசன் ஆஃப் இந்தியா என்றால் இந்தியாவை கட்டமைத்தல் என்பது தான் பொருள். அது ஒரு சட்டம் இல்லை. கான்ஸ்டிடியூசன்ஸ் லா என்று இல்லை. கான்ஸ்டிடியூசன்ஸ் ஆக்ட் என்றில்லை. தி கோட் ஆப் கான்ஸ்டிடியூசன்ஸ் என்று இல்லை. கான்ஸ்டிடியூசன் ஆப் இந்தியா என்று இருக்கிறது. இந்திய கட்டமைப்பு என்று பொருள்.
இந்தியாவை கட்டமைத்தல் ஆகவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்று நாம் சொல்லுகின்ற கான்ஸ்டிடியூசன்ஸ் ஆஃப் இந்தியா என்பது, ஒரு கொள்கை அறிக்கை. அது ஒரு சாசனம். புதிதாக ஒரு இந்தியாவை கட்டமைக்கப் போகிறோம். நாங்களே ஒரு குடியரசை நிறுவ போகிறோம். எதற்காக? இங்குள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைப்பதற்காக. ஒவ்வொருவருக்குமான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக. நாங்கள் தீர்மானித்திருக்கிறோம் ஒரு குடியரசை நிறுவுவதற்காக என்றுதான் முகவுரையே தொடங்குகிறது என தெரிவித்தார்.