இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் நாடு முழுவதும் மின் உற்பத்தி பாதிப்பால் சுமார் 7.30 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் டீசல் தட்டுப்பாடு நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து இலங்கையில் உக்ரைன் ரஷ்யா போர் காரணமாகவும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவும் பெட்ரோல், டீசலுக்கு இனிவரும் காலங்களில் தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் கூறியதாவது. “எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 70 சதவீத தனியார் பேருந்துகளை இயக்க முடிகிறது இந்த நிலை மேலும் தொடர்ந்தால் நாளை முதல் 90 சதவீத பேருந்துகளை இயக்க முடியாத சூழல் ஏற்படும்” என்று தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இதன் விளைவாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் என ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு பெரிதும் பாதிப்பு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் அண்மையில் இலங்கைக்கு 40 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோல் டீசல் வழங்க முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.