திண்டுக்கல்லில் அரசு பேருந்து மோதியதில் சக்கரத்தில் சிக்கி முதியவரின் கால் நசுங்கியது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தில் அந்தோணிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வை குறைபாடு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் திண்டுக்கல் பேருந்து நிலையத்துக்கு செம்பட்டி செல்வதற்காக வந்துள்ளார். அவர் திருச்சி செல்லும் பேருந்து நிறுத்தப்படும் இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது முசிறிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக அந்தோணிராஜ் மீது வேகமாக மோதியது. அதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது முதியவரின் இடது காலில் பேருந்தின் முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. அதில் அவருடைய கால் நசுங்கியது. அவர் வலியால் அலறித்துடித்தார். அதனை பார்த்த பயணிகள் ஓடிவந்து அந்தோணிராஜை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் அரசு பேருந்து ஓட்டுநரான திண்டுக்கல்லைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மீது திண்டுக்கல் வடக்கு காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.