கராச்சி நகரத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் மிகப் பெரிய நகரம் கராச்சி. இந்நகரில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டதாக தெரியவந்துள்ளது.
இதன் முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி கட்டிடத்தின் முதல் தளம் இடிந்துள்ளதாகவும் அதில் கட்டிட ஒப்பந்ததாரர், தொழிலாளர்கள் உள்ளிட்ட 12-க்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கி கொண்டதாக தெரியவந்துள்ளது. மேலும் அவர்களை மீட்பதற்காக பெரிய இயந்திரங்கள், கிரேன்கள் போன்றவை கொண்டுவரப்பட்டு, மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர்.
இதனையடுத்து இடிபாடுகளில் சிக்கியவர்களில் இரண்டு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் செல்லும் வழியிலே உயிரிழந்துள்ளார். இதுவரை இந்த கட்டிடம் எப்படி இடிந்து விழுந்தது என்ற காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தரமற்ற பொருள்களை வைத்து கட்டியதால் தான் கட்டிடம் இடிந்து விழுந்திருக்கலாம் என்று போலீசார் கூறியுள்ளனர்.