வளர்ப்பு நாயின் கண்களை தோண்டி எடுத்து தெருவில் விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பட்டாம்பியில் பிரபல ஓவியர் துர்கா மாலதி என்பவரின் வளர்ப்பு நாய் கடத்தப்பட்டு அதன் கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாகு என்ற வளர்ப்பு நாயை கடந்த நவம்பர் 15 ஆம் தேதி முதல் காணவில்லை. வீட்டார் அக்கம் பக்கத்தில் தேடியும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் நேற்று வீட்டின் கேட் முன்பு நாய் கண்களை இழந்த நிலையில் இருப்பதை குடும்பத்தினர் பார்த்து கதறி அழுதனார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு நாய் கொண்டு செல்லப்பட்ட நிலையில் கால்நடை மருத்துவர்கள் இல்லாததால் மீண்டும் வீட்டிற்கு நாய் கொண்டுவரப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் நாய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிட் பயன்படுத்தியதன் மூலம் நாயின் கண்கள் பிடுங்கப்பட்டிருக்கலாம் அல்லது சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் என கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் தெரிவித்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.