அருந்தமிழ் குன்றமாக இருந்த ஊர் பெயர் ஆறு முக்கிய ஊர்களை இணைப்பதால் அரக்கோணம் என மாறியதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் முதல் ரயில் சேவை தொடங்கிய போதே அரக்கோணத்தில் ரயில் நிலையம் செயல்பட்டுள்ளது. ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய ஓடுதளத்தை கொண்ட கடற்படைத் தளமும், ஹெலிகாப்டர் பயிற்சிப் பள்ளியும் உள்ளன. மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கான பயிற்சி பள்ளியும் இங்கு செயல்பட்டு வருகிறது.
விவசாயமும், நெசவும் பிரதான தொழில்களாக உள்ளன. அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் ஒருமுறை சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது. திமுக 7 முறையும், அதிமுக 5 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளனர். தற்போதைய எம்எல்ஏ அதிமுகவின் ரவி. அரக்கோணம் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,26,511 ஆகும். வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என அளித்த வாக்குறுதியை 10 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்து நிறைவேற்றவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருப்பதி-சதுரங்கப்பட்டினம், சென்னை-கன்னியாகுமரி தொழில்துறை சாலை விரிவாக்கத் திட்டம் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவும் புகார் கூறுகின்றனர். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகள் தேவை என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. கிராம பகுதிகளுக்கு போதுமான அளவில் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் மக்கள் கூறுகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் விருப்பமாக உள்ளது.
மலர்களை பதப்படுத்தும் நிலையமும், கொள்முதல் நிலையமும் தேவை என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும். அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர். ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பது நெசவாளர்களின் கோரிக்கையாக உள்ளது. சிப்காட் அறிவிப்பு வெளியாகி 10 ஆண்டுகள் ஆகியும் எந்த நிறுவனங்களும் தொடங்கவில்லை என்பதும் மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.