மதுரையில் கழிவுநீர் தொட்டியை சீரமைக்கும் போது பணியாளர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மதுரையில் மாநகராட்சி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது நச்சுக்காற்று தாக்கிய 3 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி அறிந்ததும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அதில் ஒருவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என்பது மேலும் வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார்.
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். இருந்தும் அது பற்றி ஆளும் அரசுகள் எந்தவித அக்கறையும் செலுத்தாது அலட்சியம் செய்ததன் விளைவே தற்போது மேலும் மூன்று உயிர்கள் பறிபோக முக்கிய காரணமாகும். ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கவும், பணம் எடுக்கவும், குளிர்பானங்களை பெறவும் இயந்திரங்கள் வந்துவிட்ட எனது நாட்டில் மனிதக் கழிவுகளை அள்ளவும், பாதாள சாக்கடையை தூய்மைப்படுத்தவும் மனிதர்கள் இறங்கி தங்கள் கைகளால் செய்ய வேண்டி இருப்பதென்பது ஏற்றுக்கொள்ளவே ஏற்றுக் கொள்ளவே முடியாத பெருங்கொடுமை ஆகும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.