அரசின் சலுகைகளுக்கு வனத்துறையினர் முட்டுக்கட்டை போடுவதாக பழங்குடியின மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியன்குடி என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியில் பழங்குடியின மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வேளாண்மை துறையின் சார்பில் ஆடு வளர்க்கும் திட்டத்தின் கீழ் அப்பகுதியில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு வழங்குவதற்காக ஆடுகள் அப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வனப்பகுதிக்குள் அனுமதியின்றி ஆட்டுக்குட்டிகளை கொண்டு வரக்கூடாது என அந்த ஆடுகளை திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வனத்துறையினரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த வேளாண்மை துறை உதவி இயக்குனர் சின்ன கண்ணு, லோயர்கேம்ப் இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் தாசில்தார் அர்ஜுனன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது அரசு சார்பில் வழங்கும் சலுகைகள் எங்களுக்கு கிடைப்பதற்கு வனத்துறையினர் முட்டுக்கட்டை போடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து எங்கள் பகுதியில் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் வீட்டுமனை பட்டா ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விட்த்துள்ளனர். மேலும் இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்னரே பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.