டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மத்திய அரசு நடத்திய ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் விவசாயிகள் இன்று 11வது நாளாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. இதனைத் தவிர மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால் அந்த பேச்சு வார்த்தை எந்த ஒரு பதிலையும் எட்டவில்லை. வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறும் வரையில் போராட்டம் கட்டாயம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் கடும் குளிரில் இரவு பகல் பாராமல் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு நாடு முழுவதிலும் பெரும் ஆதரவு பெருகியுள்ளது. ஆனால் மத்திய அரசு என்னவோ அதனை ஒரு பொருட்டாக கருதவில்லை.
இந்நிலையில் விவசாயிகள் மற்றும் மத்திய அரசு இடையே ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. அரசு சார்பாக விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பங்கேற்றனர். மத்திய அரசு தரப்பில் வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வருவது பற்றி பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தனர். ஆனால் விவசாயிகள் தரப்பில் வேளாண் சட்டங்களை முழுவதும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதனால் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.