இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி சட்ட கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் இந்திய அரசியலமைப்பு தினம் நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. இதில் சட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சட்ட விழிப்புணர்வு வாசகங்களை கொண்ட பலகைகளை ஏந்திக் கொண்டு ஊர்வலம் சென்றுள்ளனர். இதனை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான குணசேகரன் தொடங்கி வைத்துள்ளார்.
இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளர், சார்பு நீதிபதியான ஸ்ரீ வித்யா, மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி சரவணன், மாவட்ட குடும்பநல நடுவர் நீதிமன்ற நீதிபதி பாலசுப்பிரமணியன், கூடுதல் சார்பு நீதிபதி முருகன், வக்கீல்கள், தன்னார்வலர்கள், கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் சட்ட கல்லூரி மாணவர்கள் என பலரும் இதில் பங்கேற்றுள்ளனர்.