சசிகலா தமிழகம் முழுவதும் ஆன்மிக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதற்கிடையே சசிகலா சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப் பயணமாக காரில் வந்தார். நேற்று முன்தினம் காலையில் நாமக்கல் வந்த சசிகலா, அங்குள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் சாமிதரிசனம் செய்தார். பின்னர் அவர் திருச்செங்கோடு, சங்ககிரி வழியாக சேலம் வந்தார்.
சேலம் ராஜகணபதி கோவிலில் சாமி தரிசனத்தை முடித்த அவர் சேலம் மாமாங்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார். நேற்று 2வது நாளாக மாமாங்கத்தில் இருந்து காரில் தாரமங்கலம் சென்றார். பின்னர் பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு சசிகலா நிருபர்களிடம் கூறுகையில், “கொங்கு மண்டல மக்கள் மிகவும் மென்மையானவர்கள்.
அன்பாகவும், பாசமாகவும் பழகுகின்றனர். ஒருவர் அரசியலில் இருப்பதும், இல்லாமல் போவதும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் எடுக்கிற முடிவு. தனிப்பட்ட ஒருவர் அதனை கூற முடியாது. தமிழக மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் யாரை விரும்புகிறார்களோ, அவர்களை அரசியலில் இருந்து யாராலும் விரட்ட முடியாது. நான் சென்ற இடங்களில் எல்லாம் தொண்டர்கள் எழுச்சியை பார்க்க முடிந்தது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மாற்றம் வரும்”. என்றார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களுடன் நின்று குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.