தோழர் சு வெங்கடேசன் எம்பி குறித்து அமைச்சர் கே என் நேரு ஒருமையில் பேசி இருப்பது அரசியல் நாகரீகம் அற்றது என்று கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கே என் நேரு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம் பி வெங்கடேசனை அவன் இவன் என்று பேசியதாக ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த கே என் நேரு எதார்த்தமாக இயல்பாக பேசக்கூடியவர். வாய்க்கு வந்ததை சட்டென்று பேசிவிடுவார். அதுவே அவருக்கு சில நேரங்களில் சிக்கலாக வந்துவிடும். அடிக்கடி எதையாவது சர்ச்சையாக பேசி சிக்கிக் கொள்வது தான் அவரது பழக்கம். இதனால் தேவையில்லாமல் திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும். இப்படி தான் தற்போது இன்னொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்தமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி வெங்கடேசனை அவன் இவன் என்று பேசியுள்ளார்.
செய்தியாளர் இவரிடம் ஒரு கேள்வி கேட்க, அதற்கு யாரிடம் கேட்க வேண்டுமோ? அவர்களிடம் கேளுங்கள். வெங்கடேசன் ஒருத்தன் இருக்கான்…. அவன் கிட்ட கேளுங்க… என்று சொல்லியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மதுரை மக்கள் மத்தியில் மதிப்புக்கு உரியவராக இருக்கும் வெங்கடேசன் மதுரை எம்பியாக இருந்தாலும் தமிழக நலன் சார்ந்த பல்வேறு செயல்களை செய்து வருகிறார். அப்படிப்பட்டவரை இப்படி ஒருமையில் பேசுவது சரியா? என்று பலரும் விமர்சனங்கள் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளார். தோழர் வெங்கடேசன் எம்பி குறித்து அமைச்சர் கே என் நேரு ஒருமையில் பேசி இருப்பது அரசியல் நாகரிகமற்ற செயல். பொது வாழ்வில் இருப்போர் நிதானத்துடன் பேசுவதையே மக்கள் விரும்புவார்கள், எதிர்பார்ப்பார்கள். பொது இடத்தில் வைத்து எம்பி ஒருவரை தரக்குறைவாக பேசி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று அவர் தெரிவித்துள்ளார்.