தமிழகத்தில் வேல் யாத்திரையின் போது பாஜகவினர் காவல்துறை அதிகாரிகளிடம் அத்து மீறி செயல்பட்டதாக நீதிமன்றத்தில் டிஜிபி தரப்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் பாஜக சார்பாக நவம்பர் 6 ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரையில் வேல் யாத்திரை நடைபெறும் என பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. அதனால் பாஜக நீதிமன்றத்தை நாடி சென்றது. நீதிமன்றமும் கைவிரித்து விட்டது. இந்த நிலையில் வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் வேல் யாத்திரையின்போது பாஜகவினர் காவல் அதிகாரிகளிடம் அத்து மீறி செயல்பட்டதாக டிஜிபி கூறியுள்ளார்.
இதுபற்றி டிஜிபி தரப்பு நீதிமன்றத்தில் முன்வைத்த வாதத்தில், “பாஜக மாநில தலைவர் முருகன் பல்வேறு இடங்களில் முறையாக முகக்கவசம் அணிய வில்லை. மேலும் பாஜகவினர் பொறுப்பை உணராமல் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். வேல் யாத்திரை, கோவில் யாத்திரை அல்ல. அது முழுக்க முழுக்க அரசியல் யாத்திரையே. நவம்பர் 6ஆம் தேதி பாஜகவினர் தடையை மீறி ஊர்வலம் சென்றார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.