அலைக்கற்றை முறைகேடு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது.
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாக சி.பி.ஐ., மத்திய அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட மத்திய தொலைதொடர்பு மந்திரி ஆ. ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேரை கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 21- ஆம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் 2018- ஆம் ஆண்டு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட் நீதிபதி யோகேஷ் கண்ணா அமர்வு முன் தொடங்கியது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் நீரஜ் ஜெயின் வாதிட்டதாவது.
இந்த வழக்கு கடந்து வந்த பாதை மற்றும் விவரங்களை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பின் தொடக்கத்திலேயே முன் முடிவுக்கு வந்துள்ளதை பார்க்க முடிகிறது. இந்த முறைகேட்டால் அரசுக்கு 22 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஆ.ராசா மத்திய மந்திரியாக இருந்தபோது அவர் தகுதியற்ற நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தார். இதனால் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட யாருடைய பரிந்துரைகளுக்கும் செவி சாய்க்காமல் அவர் தன்னிச்சையாக செயல்பட்டார்.மேலும் அவர் தனக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு முறைகேடாக அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தார் என அவர் வாதிட்டார். இந்த வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி விசாரணையை இன்னொரு நாளுக்கு ஒத்தி வைத்தார்.