ரேஷன் கடைகளில் எலிகளை ஒழிப்பதற்காக தமிழக அரசின் சேமிப்பு கிடங்கு நிறுவனங்களுடன் கூட்டுறவுத்துறை ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறது.
பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் சார்பில் ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றது. அவற்றில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள உணவு தானிய மூட்டைகளை கரப்பான்பூச்சிகள் மற்றும் எலிகள் கடித்து குதறிப் பாழாக்குகின்றன. இதனால் உணவு தானியங்கள் வீணாகி அரசிற்கு கோடிக்கணக்கில் பணம் நஷ்டம் ஆகிறது. இந்நிலையில் உணவு துறையின் கீழ் செயல்படும் தமிழக சேமிப்பு கிடங்கு நிறுவனம் கிடங்குகளில் பொருட்களை பாதுகாக்க பூச்சி தடுப்பு பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
இதனால் ரேஷன் கடைகளில் எலிகளை ஒழிக்க சேமிப்பு கிடங்கு நிறுவனத்துடன் கூட்டுறவுத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய இருக்கிறது. இதுபற்றி இணை பதிவாளர் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ரேஷன் கடைகளில் எலிகளையும், பூச்சிகளை ஒழிக்க சேமிப்பு கிடங்கு நிறுவனம் வாயிலான நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக தங்களது மண்டலங்களில் உள்ள கடைகளில் முகவரி விற்பனையாளர் பெயர், மொபைல் போன் எண், கூட்டுறவு சார்பதிவாளர், ஆய்வாளர் விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும் அதில் கூறப்பட்டுள்ளது.