Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசுப் பள்ளியில் சத்துணவுக் கூடம் இடிந்து விபத்து – 3 மாணவர்கள் படுகாயம்

ஆண்டிபட்டி அருகே பள்ளி வளாகத்தில் பயன்பாட்டில் இல்லாத  சத்துணவு சமையல் கூட கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பொன்னன்படுகை என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  இந்த பள்ளி வளாகத்தில் சத்துணவு சமைப்பதற்காக 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட சமையல் கூடம் பயன்பாடின்றி இருந்தது. அந்த கட்டிடத்தை இடிக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காததால் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.

இந்நிலையில், பள்ளி மதிய உணவு இடைவேளை நேரத்தில் மாணவர்கள் அந்த கட்டிடம் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அதில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் செல்வக்குமார், ஈஸ்வரன் உள்பட மூன்று மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

 

காயம் அடைந்த மாணவர்களை மீட்ட அந்த கிராம மக்கள் உடனடியாக இருசக்கர வாகனங்களில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் பழுதடைந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தாதே இந்த விபத்துக்கு காரணம் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

Categories

Tech |