பழங்குடியினர் உண்டு, உறைவிட பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலம் கருதி காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என்று அமைச்சர் கயல்விழி தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தலைமையில் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் பழங்குடியின மக்களுக்கு கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பழங்குடியினர் நலப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மேலும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் இந்த பள்ளிகளில் மாணவர்களின் நலன் கருதி காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் வரை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி மற்றும் விடுதிகளில் அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தி தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும். பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கு தகுந்த ஆலோசனை வழங்கி உயர் கல்வி படிப்பில் சேர்வது உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.