கர்நாடகாவில் அரசு அலுவலகங்களுக்கு அரசின் சேவைகளை பெற வரும் பொதுமக்கள் தங்களது செல்போனில் அலுவலகம் மற்றும் அதிகாரிகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க தடை விதித்து நேற்று முன்தினம் முதல் கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு எதிர்கட்சிகளான காங்கிரஸ் ஜனதா தளம் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பொது மக்களும் சமூக அலுவலர்களும் அரசின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா முறைகேடுகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை காப்பாற்றும் நோக்கத்தில் அரசு அலுவலகங்களில் புகைப்படம் வீடியோ எடுக்க பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்த சூழலில் அரசு அலுவலகங்களில் புகைப்படம் வீடியோ எடுக்க தடை விதிப்பதால் அரசிற்கு தான் தேவையில்லாத கெட்ட பெயர் ஏற்படுகிறது எனவும் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு முதல் மந்திரி பசவராஜ் பொம்மை அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து சாதாரண அரசு அலுவலகங்களில் இருந்து விதான சவுதா வரையிலான அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணி நேரத்தின் போது அரசின் சேவைகளை பெறுவதற்காக வரும் பொதுமக்கள் புகைப்படம் வீடியோ எடுக்க பிறப்பிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை கர்நாடக அரசு அதிரடியாக ரத்து செய்து இருக்கின்றது.