தமிழக அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை குறைக்க உள்ளதாக தமிழக அரசு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் 12 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்து வந்தது. ஆனால் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஐம்பத்தி ஒன்பது ஆக உயர்த்தினார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மேலும் உயர்த்தி 60 ஆக தமிழக அரசு அறிவித்தது. இது 2021 மே மாதம் 31-ஆம் தேதி க்கு பிறகு ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. இவ்வாறாக ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதற்கு அரசு ஊழியர்களிடம் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது.
நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டன. இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆக குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகிற 5ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் கூடவுள்ளது. இதனை அடுத்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து இது குறித்து முக்கிய முடிவுகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.