தமிழக அரசு ஊழியர்கள் எடுத்துள்ள திடீர் முடிவு தமிழ்நாடு அரசு வட்டாரத்தை கதிகலங்க வைத்துள்ளது.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மயிலாடுதுறை திரு இந்தளூரில் மாநில தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் பழனிவேலு வரவேற்று பேசியுள்ளார். தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதற்கு முன்னதாக மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வேலை அறிக்கையை முன்வைத்து பேசியுள்ளார்.
மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவாக மாநில செயற்குழு உறுப்பினர் இளமாறன் நன்றி கூறியுள்ளார். இந்த கூட்டத்திற்குப் பின் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவரான ஸ்ரீதரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தமிழகத்தில் வருகிற 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் பாஜக அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் சார்பில் 48 மணிநேர பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு தமிழக அரசு துறை ஓய்வூதியர் சங்கம் முழு ஆதரவு அளிக்க இருக்கிறது.
ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெறும் இந்த போராட்டங்களில் ஓய்வூதியர் சங்கத்தினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதேபோன்று 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஏப்ரல் 19 வட்டத் தலைநகரங்களில், மற்றும் மே 17ஆம் தேதி அன்று மாவட்ட மையங்களில் தர்ணா போராட்டம் நடைபெற இருக்கிறது.
மேலும் ஜூன் 21ஆம் தேதியன்று மாநில அளவில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் உறுப்பினர்கள் முதல் பொறுப்பாளர் வரை ஏராளமானோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஸ்ரீதரன் கூறியுள்ளார்.