அரசு ஊழியர்கள் ஓய்வு வயது மீண்டும் 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது எந்த அடிப்படையில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான அரசாணை தற்போது வெளியாகியுள்ளது. 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களின் ஓய்வு வயது 55 இல் இருந்து 58 ஆக உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது ஓய்வு பெறும் வயது மீண்டும் 58-ல் இருந்து ஒரு வருடம் உயர்த்தப்பட்டு 59ஆக உயர்த்தப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய பலன்களை வழங்க முடியாத சூழ்நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டது. இது அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக இருந்தாலும் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களை அது பெரிய அளவில் பாதித்தது,
ஓய்வூதிய வயது அதிகரிப்பதால் பலருக்கும் வேலை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இதனால் மீண்டும் ஓய்வு வயதை குறைக்க பலரும் கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை எந்த அடிப்படையில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பலரும் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் தற்போது இதுதொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி வெளியிட்ட அரசாணை 92 ன் படி ஓய்வு வயது 60ஆக உயர்த்தப்பட்டது. இதன் அடிப்படையில் பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து 60 வயதை எட்டும் தேதியை மட்டும் எடுக்காமல் அந்த மாதத்தின் இறுதி நாள் வரை கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.